எதிர்க்கட்சிகள் விவகாரத்தில் ‘தேர்தல் கமிஷன் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகள் விவகாரத்தில் ‘தேர்தல் கமிஷன் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 May 2019 10:30 PM GMT (Updated: 4 May 2019 10:09 PM GMT)

எதிர்க்கட்சிகள் தொடர்பான விவகாரங்களில் தேர்தல் கமிஷன் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் ஒன்றையொன்று மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றன. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனில் பலமுறை புகார் அளித்தது.

ஆனால் அவற்றை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், மோடி மற்றும் அமித்ஷாவின் பிரசாரத்தில் விதிமீறல் இல்லை என அறிவித்தது. இது காங்கிரசாருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் நேற்று அதிருப்தி வெளியிட்டார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

பா.ஜனதா தொடர்பான விவகாரங்களில் தேர்தல் கமிஷன் நேராக செயல்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்பான விவகாரங்களில் தேர்தல் கமிஷன் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. மோடியின் நடவடிக்கைகள், ஆளும் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போன்றவை ஜனநாயக நிறுவனங்களுக்கு அழுத்தங்களை அளிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் கமிஷன், திட்டக்குழு, ரிசர்வ் வங்கி அனைத்திலும் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுதான் அவர்களது அணுகுமுறை. இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய ஜனநாயக நிறுவனங்களை கட்டுப்படுத்துதல், தொந்தரவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

ராணுவத்தை மோடி அரசியலாக்கக்கூடாது. அவரால் ராணுவத்தை அவமதிக்க முடியாது. ராணுவத்தை அவமதிப்பது, தேசத்தை அவமதிப்பது ஆகும். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை போன்ற முப்படைகள் மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல. காங்கிரஸ் கட்சி துல்லிய தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. ராணுவம்தான் அதை செய்தது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்கும்போது, ‘அடுத்த பிரதமர் யார்? என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள். அது எனது வேலை அல்ல. பா.ஜனதாவை தோற்கடிப்பதே எதிர்க்கட்சிகளின் முதல் குறிக்கோள்’ என்று தெரிவித்தார்.


Next Story