தேர்தல் செய்திகள்

சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி, அமேதி உள்பட 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு + "||" + Sonia and Rahul will compete Répareli, including Amethi in 51 seats Tomorrow record vote

சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி, அமேதி உள்பட 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி, அமேதி உள்பட 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிடுகிற ரேபரேலி, அமேதி உள்பட 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, மற்றும் 29-ந் தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. பெரும்பாலும் இந்த தேர்தல்கள் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.


இந்த நிலையில் 5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என மொத்தம் 51 தொகுதிகளில் நாளை (6-ந் தேதி) தேர்தல் நடக்கிறது.

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிற 14 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. ஒன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வென்ற ரேபரேலி, மற்றொன்று அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி வெற்றி பெற்ற அமேதி.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தத்தமது தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறார்கள். ரேபரேலியில் சோனியா காந்தி பிரசாரம் செய்யாதபோதும் அவரது வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமேதியில் ராகுல் காந்திக்கும், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் (பா.ஜனதா) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சத்ருகன் சின்கா மனைவி பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு, ராஜ்நாத் சிங்குக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தி உள்ளார்.

பிற மாநிலங்களை பொறுத்தமட்டில் மத்திய பிரதேசத்தில் மத்திய மந்திரி வீரேந்திர குமார் காட்டிக் (திக்கம்கார்-பா.ஜனதா), பீகாரில் லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராஸ் (ஹாஜிப்பூர்) முக்கிய வேட்பாளர்களாக இருக்கிறார்கள்.

51 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிந்தது.

பாரதீய ஜனதா கட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சிக்காக அதன் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, திரிணாமுல் காங்கிரசுக்காக அந்த கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளத்துக்காக அதன்தலைவரும் பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

51 தொகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இடைவிடாது நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

சுமார் 675 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இவர்கள் முடிவு செய்கின்றனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 96 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.