13வது மக்களவை தேர்தல்; 5 வருடங்கள் ஆட்சி செய்த பா.ஜ.க.


13வது மக்களவை தேர்தல்; 5 வருடங்கள் ஆட்சி செய்த பா.ஜ.க.
x
தினத்தந்தி 12 May 2019 8:36 AM GMT (Updated: 12 May 2019 8:36 AM GMT)

13வது மக்களவை தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்து 5 வருடங்கள் அரசாண்டது.

இந்தியாவில் நடந்த 13வது மக்களவை தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று 5 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தது.  இதனால் தேசிய அளவில் ஏற்பட்டிருந்த அரசியல் நிலைத்தன்மையற்ற போக்கு முடிவுக்கு வந்தது.

இந்த தேர்தலில் முந்தைய இரு வருட கால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபட்டது.  எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி விதேசி (வெளிநாட்டை சேர்ந்தவர்) என்றும் வாஜ்பாய் சுதேசி (உள்நாட்டில் வளர்ந்தவர்) என்றும் பா.ஜ.க. முன்னிலைப்படுத்தியது.

இது தவிர கார்கில் போரை வாஜ்பாய் கையாண்டது, பொருளாதார தாராளவாதம் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் ஆகியவற்றால், அதற்கு முன்பு ஆட்சி செய்த 2 வருடங்களில் நாடு வலிமையான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது, குறைந்த பணவீக்க விகிதம் மற்றும் அதிக தொழிற்சாலை வளர்ச்சி விகிதம் ஆகிய சாதனைகளை முன்னிறுத்தி கடுமையாக பிரசாரத்தில் ஈடுபட்டது.  இவற்றுக்கு மேலாக அரசு கவிழ்ந்தது பற்றி கூறி இரக்கத்தினையும் அறுவடை செய்து கொண்டது.

இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 270 தொகுதிகளை கைப்பற்றியது.  பா.ஜ.க. 182 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த தெலுங்கு தேசம் 29 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

Next Story