அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு: பிரசாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன் தொண்டர்கள் குழப்பம்


அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு: பிரசாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன் தொண்டர்கள் குழப்பம்
x
தினத்தந்தி 14 May 2019 5:00 AM IST (Updated: 14 May 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீரென ரத்து செய்தார். இது கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக மோகன்ராஜ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் மாலை சில இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், “அந்த காலத்தில் வெள்ளையனே வெளியேறு என போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு என போராட வேண்டிய சூழல் வந்துவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக மூவர்ணக்கொடியில் அந்த மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன்” என்று கூறினார்.

தீவிரவாதத்தையும், இந்து மதத்தையும் தொடர்புபடுத்தி கமல்ஹாசன் கூறிய இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனுக்கு, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரசாரம் திடீர் ரத்து

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தென்னிலை, பரமத்தி ஆகிய இடங்களில் நேற்று கமல்ஹாசன் திறந்தவேனில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக ஒரு போலீஸ் குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டு திடீரென பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காரில் அவர் மதுரைக்கு சென்றுவிட்டதாகவும், மீண்டும் வருகிற 16-ந் தேதி அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.

காரணம் என்ன?

பிரசாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த வேளையில் திடீரென கமல்ஹாசன் பிரசாரத்தை ரத்து செய்தது ஏன்? என நிர்வாகிகள், தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. கோட்சே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பிரசாரத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக கூட இருக்கலாம் எனவும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தபோது தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஹேராம்’ திரைப்படம்

கடந்த 2000-ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் ‘ஹேராம்’ என்ற திரைப்படம் வெளியானது. அதில் சாகேத்ராம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன், மதக்கலவரத்தில் தனது முதல் மனைவி இறந்ததற்கு காந்தி தான் காரணம் என நினைத்து அவரை சுட்டுக்கொல்ல துப்பாக்கியை எடுத்துக்கொண்டு செல்வார். அப்போது காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுடுவதாக காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story