15வது மக்களவை தேர்தல்; 2வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி


15வது மக்களவை தேர்தல்; 2வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி
x
தினத்தந்தி 15 May 2019 4:26 PM GMT (Updated: 15 May 2019 6:59 PM GMT)

நாட்டின் 15வது மக்களவை தேர்தலில் 2வது முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

நாட்டில் 15வது மக்களவை தேர்தல் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 16 மற்றும் மே 13 ஆகிய நாட்களுக்கு இடையே 5 கட்டங்களாக நடந்தது.  இந்த தேர்தலில் 71.4 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர்.  இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் இணைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட கூடுதலாகும்.  உலகிலேயே மிக பெரிய ஜனநாயக தேர்தலாக இது அமைந்திருந்தது.

இந்த தேர்தலில் 8,070 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  5 கட்ட தேர்தலில் சராசரியாக 56.97 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின.  மே 16ந்தேதி முடிவுகள் வெளிவந்தன.  காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது 262 இடங்களை பிடித்தது.

அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 19 இடங்களையும், தி.மு.க. 18 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களையும், தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2 இடங்களையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களையும், விடுதலை சிறுத்தைகள், கேரள காங்கிரஸ் (மணி) மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் ஆகிய கட்சிகள் தலா 1 இடமும் பிடித்திருந்தன.

தேசிய ஜனநாயக கூட்டணியானது 159 இடங்களை பிடித்திருந்தது.  பா.ஜ.க. 116 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களையும், சிவசேனா 11 இடங்களையும், ராஷ்டீரிய லோக் தளம் 5 இடங்களையும், ஷிரோமணி அகாலி தளம் 4 இடங்களையும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி 2 இடங்களையும், அசாம் கனபரிஷத் 1 இடமும் பிடித்திருந்தன.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் பிற சிறிய கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு வழங்கின.  இந்த தேர்தலில் 322 உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.  இதனால் 5 வருட ஆட்சிக்கு பின் 2வது முறையாக மீண்டும் மன்மோகன் சிங் பிரதமரானார்.....

Next Story