தேர்தல் செய்திகள்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 78 சதவீத வாக்குப்பதிவு + "||" + Elections held in Tamil Nadu 78 percent of the 4 seats are voting

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 78 சதவீத வாக்குப்பதிவு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 78 சதவீத வாக்குப்பதிவு
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும், 78 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
சென்னை,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளு மன்ற தேர்தல் நேற்று டன் முடிவடைந்தது.

இறுதி கட்டமாக நேற்று 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏற்கனவே, 2-வது கட்ட தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் (கடந்த மாதம்) 18-ந் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலுடன் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.


மீதமுள்ள 4 தொகுதிகளான அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகியவற்றுக்கு இறுதி கட்ட தேர்தல் நாளான நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்களும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்களும், சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த 4 தொகுதிகளில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, வாக்காளர்களுக்கு இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் இடதுகை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது.

காலை முதலே ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டதை காண முடிந்தது. குறிப்பாக இளம் வாக்காளர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் காலை 6.30 மணிக்கே வாக்காளர்கள் வந்தாலும், காலை 7 மணியில் இருந்தே ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். மொத்தத்தில், 4 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பூந்தமல்லி, பாப்பிரெட்டிப்பட்டி, பண்ருட்டி, காங்கேயம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் பிரச்சினை ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, அந்த வாக்குச்சாவடிகளிலும் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் 4-ல் சற்று மந்தமாக வாக்குப்பதிவு நடந்தாலும், மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் வேகமாகவே வாக்குப்பதிவு நடந்தது. பதற்றமானவையாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 656 இடங்களில் வெப்-கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

காலை 11 மணி நிலவரப்படி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 31.68 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 58.24 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 68.85 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 4 தொகுதிகளிலும் சேர்த்து 77.60 சதவீத வாக்குகள் பதிவாயின.

அதாவது, அரவக்குறிச்சி தொகுதியில் 84.28 சதவீத வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 74.11 சதவீத வாக்குகளும், சூலூர் தொகுதியில் 79.41 சதவீத வாக்குகளும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.61 சதவீத வாக்குகளும் பதிவாயின.

மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 13 வாக்குச்சாவடிகளில் 84.13 சதவீத வாக்குகள் பதிவாயின.

நடைபெற்று முடிந்த 4 சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும், ஏற்கனவே நடைபெற்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 23-ந் தேதி எண்ணப்பட இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடைபெற்ற 4 சட்டசபை தொகுதிகளிலும், மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 13 வாக்குச்சாவடிகளிலும் பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தது. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உடனடியாக தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் சென்று பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் காலையிலேயே பிரச்சினை எழுந்ததால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதன் பேரில் அங்கும் பிரச்சினை எதுவும் எழாத வகையில் ஓட்டுப்பதிவு முடிவடைந்து உள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் மறு தேர்தல் தேதி தொடர்பாக எந்த தகவலும் இந்திய தேர்தல் கமிஷனிடம் இருந்து வரவில்லை. தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்திய அளவில் மிக நேர்மையாக, அமைதியாக தேர்தலை நடத்தி முடித்து உள்ளோம்.

தேர்தலை நடத்தி முடிப்பதில் பல சவால்கள் இருந்தது. இருந்தபோதிலும் அந்த சவால்களை எல்லாம் தேர்தல் பணியில் ஈடுபட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் சாதுரியமாக கையாண்டனர். அதே வேளையில், அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.