மேற்குவங்காள மாநிலத்தில் வன்முறை நடந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் : தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா மனு


மேற்குவங்காள மாநிலத்தில் வன்முறை நடந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் : தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா மனு
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 9:38 PM GMT)

மேற்குவங்காள மாநிலத்தில் வன்முறை நடந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு கொடுத்துள்ளது.

புதுடெல்லி, 

இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனில் மத்திய மந்திரி பியூஸ்கோயல் உள்ளிட்ட பா.ஜனதா கட்சி பிரதிநிதிகள் நேற்று நேரில் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். பின்னர் இதுகுறித்து மத்திய மந்திரி பியூஸ்கோயல் கூறியதாவது:–

தேர்தலின்போது பா.ஜனதா தொண்டர்கள் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்ற முழு தகவல்களை தேர்தல் கமி‌ஷனில் தெரிவித்திருக்கிறோம். குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் 7–வது கட்ட தேர்தல் மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களிலும் வன்முறை நடந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம்.

மறுதேர்தல் நடத்த வேண்டிய சில தொகுதிகள் பற்றிய விவரங்களையும் தேர்தல் கமி‌ஷனில் தெரிவித்துள்ளோம். மேற்குவங்காளத்தில் பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். அந்த குற்றவாளிகள் மீது தேர்தல் கமி‌ஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்குவங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அம்மாநில மக்களை தேர்தலுக்கு பின்னர் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டினார். 7–வது கட்ட தேர்தல் வரை இந்த வன்முறை நீடித்தது. எனவே இனியும் அந்த மாநிலத்தில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போதும், அதன் பிறகும் அங்கு வன்முறை ஏற்படும்.

எனவே அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் மத்திய படைகளை தேர்தல் கமி‌ஷன் நிறுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலம் வரை அந்த மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய படைகள் அங்கு இருக்க வேண்டும். அப்போது தான் வன்முறை ஏற்படாது என்ற தைரியம் மக்களுக்கு வரும்.

ஒடிசா, மேற்குவங்காளம், கர்நாடகா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும். இதற்காக அங்கு ஏற்கனவே உள்ள மேலிட பார்வையாளர்களுடன் கூடுதலாக டெல்லியில் இருந்து மேலிட பார்வையாளர்களை அனுப்ப வேண்டும்.

தேர்தலின் புனிதம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும். அந்த 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் நுழையும் அனைத்து நபர்களையும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அங்கீகாரம் இல்லாத நபர்கள் நுழைவதை தடுக்க முடியும். வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை தேர்தல் கமி‌ஷனின் உயர் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கைவிடுத்துள்ளோம்.

இவ்வாறு பியூஸ்கோயல் கூறினார்.


Next Story