தேர்தல் செய்திகள்

இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் + "||" + Trying to force Hindi Political party leaders condemned

இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
புதிய கல்வி கொள்கை என்ற போர்வையில் இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,

இது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- பா.ஜனதாவின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை அமைந்த உடனேயே அம்பலமாகி உள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு அளித்த புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் 6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் கற்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழி திணிப்பை நீண்டகாலமாக எதிர்த்து போராடி தடுத்த வரலாறு உண்டு.


நாடாளுமன்றத்தில் 2 தி.மு.க. எம்.பி.க்கள் இருந்த போதும், அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அப்போதைய பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “எந்த மொழியையும் எவர்மீதும் திணிக்கக்கூடாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளும் சம அந்தஸ்துடன் நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் எந்த ஒரு மொழியும் மற்ற மொழியை தாண்டி, தேசிய மொழியாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று 1960-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கூறினார்.

நேரு வழங்கிய உறுதிமொழிக்கு எதிர்காலத்தில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதை தடுக்கவே முன்பு பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்கள். இதையும் மீறி புதிய கல்வி கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணிக்க முயன்றால் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியது வரும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தி மட்டும் தான் கட்டாயம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது இரண்டாம் பயணத்தின் தொடக்கத்திலேயே இந்தி பேசாத மாநிலங்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகியவை தான் இருமொழி கொள்கை என்று அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் மத்திய பா.ஜ.க. ஆட்சி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் இந்திக்கு இடமில்லை என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். இதில் உறுதியாக இருக்க வேண்டும். மத்திய அரசின் வற்புறுத்தலுக்கு வழக்கம் போல் அடிபணிந்து விடக்கூடாது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்புவின் டுவிட்டர் பதிவு:-

குழந்தைகளும், அவர்களுடைய பெற்றோரும் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை கட்டாயமற்ற பாடமாக விட்டுவிடுங்கள். ஏன் திணிக்கிறீர்கள்? உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி அல்லது ஏதாவது வட மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் அல்லது மலையாளத்தை கட்டாயமாக்குவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரையின்படி 8-ம் வகுப்பு வரையில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்கிற வரைவு அறிக்கையை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை என்னும் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை ஒட்டுமொத்த தமிழகமும் மிகக் கடுமையாக எதிர்த்துக் குரலெழுப்பியதும் மத்திய மந்திரிகள் அதனை மறுத்துள்ளனர். அது அரசின் கொள்கை முடிவல்ல என்றும், மக்கள் கருத்தை அறிந்த பின்னர்தான் அதன்மீது உரிய முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

அது வரைவு அறிக்கையே ஆயினும், நம்மைச் சீரழிக்கும் நீண்டகால சதிதிட்டத்தின் முன்னோட்டம் என்கிற அடிப்படையில் தீவிரமாக எதிர்ப்பது நமது ஜனநாயக கடமை என்பதைச் சுட்டிக்காட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விழைகிறது. இந்த நிலையில், பா.ஜ.க.வின் சனாதன அரசின் இந்த ஜனநாயக விரோத மேலாதிக்கப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.