கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ேபார்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு


கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  ேபார்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள்-   முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

மலைநாடு மாவட்டங்கள்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த பருவமழை காலத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. தலைநகர் பெங்களூருவிலும் கனமழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கின. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்த பிறகும் கர்நாடகத்தில் மழை பெய்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக மழை அதிகரித்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் அந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்தன. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஒசப்பேட்டேவில் இருந்தபடி காணொலி மூலம் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினாா். இதில் தார்வார், தாவணகெரே, பெலகாவி, விஜயநகர், கதக், கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, ஹாவேரி, கொப்பல், பீதர், மைசூரு, விஜயாப்புரா ஆகிய 13 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

உதவி செய்யவில்லை

கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் மழையால் பாதித்த பகுதிகளில் கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். சில மாவட்டங்களில் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. கலெக்டர்கள் எந்த குழப்பமும் ஏற்படாமல் மக்களுக்கு உதவி செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உண்மை தகவல்களின் அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். சரியாக செயல்படாத அதிகாரிகள் மீது கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில இயற்கை பேரிடர் பிரிவு கமிஷனர், கூடுதல் நிவாரணம் வழங்கும் வகையில் விதிமுறைகளை வெளியிட வேண்டும். கலெக்டர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். தாசில்தார்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

பழுதான கட்டமைப்புகள்

விவசாய பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டை முன்னுரிமை அடிப்படையில் தகுதியான விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உள்கட்டமைப்புகள் சேதம் குறித்து அதன் சேதத்தின் அளவை பொறுத்து பிரிக்க வேண்டும். அதாவது ஏ பிரிவு என்றால், கட்டமைப்பு முழுமையாக சேதம் அடைந்ததாக அர்த்தம். பி பிரிவு என்றால் கட்டமைப்புகள் பாதி சேதம் அடைந்திருக்க வேண்டும். சி பிரிவு என்றால் பழுதான கட்டமைப்புகளை தேசிய இயற்கை பேரிடர் விதிமுறைப்படி சீரமைக்க வேண்டும். இவ்வாறு உள்கட்டமைப்பு சேதங்களை மதிப்பிட வேண்டும். அதன்படி உள்கட்டமைப்பு சேதங்கள் குறித்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும்.

உடைந்த மின் கம்பங்களை 24 மணி நேரத்தில் மாற்ற வேண்டும். கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் அதனால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏரிகள் உடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள் சேதம் மற்றும் பயிர்கள் சேதத்திற்கு நிவாரணம் வழங்க நிதி பற்றாக்குறை இல்லை. அதே நேரத்தில் உள்கட்டமைப்பு சேதங்கள் குறித்து ஒரு செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். இந்த உள்கட்டமைப்பு சேதங்கள் குறித்து 3 நாட்களில் மீண்டும் ஒரு முறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story