டெல்லி சாலைகளில் அலங்கார பூந்தொட்டி திருடியவர் கைது: கார் பறிமுதல்
டெல்லி சாலைகளில் அலங்கார பூந்தொட்டிகளை திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
'ஜி20' தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டின் இறுதியில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதனால் டெல்லி நகரை அழகுபடுத்தும் பணியில் டெல்லி மாநகராட்சி கவுன்சிலின் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தோட்டக்கலைத்துறையின் இயக்குனர் தமிழகத்தை சேர்ந்த செல்லையா மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி நகரில் பூங்காக்கள், சாலையோர புல்வெளிகள் அழகுபடுத்தப்படுகின்றன. ஆங்காங்கே பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.
இப்படி டெல்லி குருகிராம் சாலையில் ஏராளமான பூந்தொட்டிகள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் அந்த பகுதியில் காரை நிறுத்தி சில பூந்தொட்டிகளை காரில் ஏற்றி சென்றுவிட்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பூந்தொட்டிகளை திருடியதாக மன்மோகன் (வயது 50) என்பவரை கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.