கொட்டகைக்குள் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் செத்தன
பங்காருபேட்டை அருகே கொட்டகைக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் செத்தன. மேலும் 3 ஆடுகள் காயமடைந்தன.
கோலார் தங்கவயல்: பங்காருபேட்டை அருகே கொட்டகைக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் செத்தன. மேலும் 3 ஆடுகள் காயமடைந்தன.
தெருநாய்கள் அட்டகாசம்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா மாஸ்தி அருகே தேமஷட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா. விவசாயியான இவர், அப்பகுதியில் கொட்டகை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்கிடையே தேமஷட்டஹள்ளி கிராமத்தில் தெருநாய்கள் அட்டகாசம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தெருவில் விளையாடும் குழந்தைகளை தெருநாய்கள் கடிப்பதும், புதிதாக வருபவர்களை பார்த்து குரைப்பதுமாக உள்ளது.
10 ஆடுகள் செத்தன
இந்த நிலையில் நேற்று சந்திரப்பாவின் கொட்டகைக்குள் தெருநாய்கள் புகுந்துள்ளது. பின்னர் தெருநாய்கள், ஆடுகளை கடித்து குதறின. இதில் தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் செத்து மடிந்தன. 3 ஆடுகள் காயம் அடைந்தன. இன்று காலை சந்திரப்பா கொட்டகைக்கு சென்று பார்த்தபோது 10 ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கொட்டகைக்குள் தெருநாய்கள் கால்தடம் இருப்பதை பார்த்தார். அப்போது தான் அவருக்கு தெருநாய்கள் கடித்து 10 ஆடுகளை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து தெருநாய்கள் தாக்கியதில் இறந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு வழங்க சந்திரப்பா, வருவாய்த்துறை, பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார்.
அதன்பேரில் அதிகாரிகள் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். மேலும் தெருநாய்கள் அட்டகாசத்தை தடுக்க அவற்றை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.