10 நிமிடம் தியானம் செய்வதால் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது


10 நிமிடம் தியானம் செய்வதால் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது
x

10 நிமிடம் தியானம் செய்வதால் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று சித்தராமையாவுக்கு, மந்திரி பி.சி.நாகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்களூரு:-

சித்தராமையா எதிர்ப்பு

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் தினமும் 10 நிமிடம் மாணவ, மாணவிகள் தியானம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இதுபற்றி சித்தராமையாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மருத்துவர்கள் விளக்கம்

தியானம், யோகா செய்வதால் உடலுக்கு ஆரோக்கியமாகவும், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறப்பாக இருக்கும் என்று மருத்துவர்கள், விஞ்ஞானிகள் நிபுணர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாணவர்கள் தியானம் செய்வதற்கு எதிராக பேசி வருகிறார். தற்போது மாணவ, மாணவிகள் செல்போன்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களை செல்போன் பயன்படுத்துவதில் இருந்து மீட்டெடுக்க தியானம், யோகா பயனுள்ளதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தான் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தினமும் 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 10 நிமிடங்கள் தியானம் செய்வதால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே தவிர எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது.

முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்கு எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளாமல் விட்டு விட்டனர். அவ்வாறு வளர்ச்சி அடைந்திருந்தால், பள்ளி கல்வித்துறையில் அடிப்படை வசதிகள் மேம்பட்டு இருக்கும். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. தற்போது பா.ஜனதா ஆட்சியில் மாணவ, மாணவிகளின் நலன் கருதியும், உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் பள்ளிகளில் 10 நிமிடங்கள் தியானம் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story