மைசூரு அருகே தனியார் பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; குழந்தைகள் உள்பட 10 பேர் பலி


மைசூரு அருகே தனியார் பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; குழந்தைகள் உள்பட 10 பேர் பலி
x

மைசூரு அருகே தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். பல்லாரியில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.

மைசூரு:

கோர விபத்து

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா குருபூரு கிராமம் அருகே பிஞ்சர்போல் பகுதியில் நேற்று மதியம் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் எதிரே ஒரு தனியார் பஸ் வந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள திருப்பத்தில் திரும்பும்போது காரும், தனியார் பஸ்சும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் சுக்கு நூறாக நொறுங்கியது. தனியார் பஸ்சும் பலத்த சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்து வந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கி மரண ஓலம் எழுப்பினர்.

10 பேர் பலி

இதைப்பார்த்த அப்பகுதி கிராம மக்களும், அவ்வழியாக சென்றவர்களும் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். ஆனால் காரில் பயணித்து வந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அத்துடன் பஸ்சில் பயணித்து வந்த சில பயணிகளும் காயம் அடைந்திருந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக டி.நரசிப்புராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே படுகாயம் அடைந்திருந்த சிறுவன் உள்பட 3 பேர் டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கும், அதையடுத்து மேல்சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டி.நரசிப்புரா போலீசாரும், உயர் போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியான அனைவரும் பல்லாரி (மாவட்டம்) தாலுகா சங்கன்கல்லு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்தில் சிக்கி பலியானவர்கள் பல்லாரி(மாவட்டம்) தாலுகா சங்கன்கல் கிராமத்தைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் ஆவர். அவர்களில் முதலாவது குடும்பத்தில் சந்தீப்(வயது 23), அவரது தந்தை கொட்ரேஷ்(45), தாய் சுஜாதா(35), 2-வது குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சுநாத்(40), இவரது மனைவி பூர்ணிமா(30), மகன்கள் கார்த்திக்(11), பவன்(7), 3-வது குடும்பத்தைச் சேர்ந்த காயத்திரி(30), அவரது மகள் ஷிராவ்யா(3) மற்றும் கார் டிரைவர் ஆகிய 10 பேர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாடகை கார்

இந்த சம்பவம் குறித்து அறிந்த மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விபத்தில் பலியானவர்கள் பல்லாரி தாலுகா சங்கன்கல்லு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மொத்தம் 12 பேர் பல்லாரியில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 3 குடும்பத்தினர் ஆவர். ஆனால் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கப்படுவதால் அவர்கள் ஒன்றாக திட்டமிட்டு சுற்றுலா வந்துள்ளனர். 4 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட மொத்தம் 12 பேர் வந்திருக்கிறார்கள். அவர்கள் பல்லாரியில் இருந்து கடந்த 27-ந் தேதி மைசூருவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். ரெயில் மூலம் மைசூருவுக்கு வந்த அவர்கள் அங்கு ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த கார் பெங்களூரு பதிவு எண் கொண்டதாகும்.

5 மணிக்கு ரெயில்

அந்த கார் மூலம் அவர்கள் சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரு மாவட்டத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து இருக்கிறார்கள். காரை டிரைவர் ஓட்டி இருக்கிறார். டிரைவருடன் சேர்த்தால் காரில் மொத்தம் 13 பேர் பயணித்து இருக்கிறார்கள். கடைசியாக அவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டம் பிளிகிரி ரங்கணபெட்டா மலையில் உள்ள பிளிகிரி ரங்கநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து காரில் மைசூரு மாவட்டம் சாமுண்டி மலையில் உள்ள கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மைசூரு ரெயில் நிலையத்திற்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

ஏனெனில் அவர்களுக்கு மைசூருவில் இருந்து பல்லாரிக்கு மாலை 5 மணிக்கு ரெயில் உள்ளது. அந்த ரெயிலில் பயணிக்க அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அதற்காக அவர்கள் சாமுண்டி மலைக்கு சென்று வேகமாக தரிசனம் செய்துவிட்டு, ரெயில் நிலையத்திற்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

அடையாளம் காண்பதில் சிரமம்

ஆனால் காரை டிரைவர் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து இருக்கிறார். அவர் வேகமாக வந்து தனியார் பஸ் மீது மோதும் காட்சிகள், பஸ்சின் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம். விபத்தில் கார் முழுவதும் பலத்த சேதம் அடைந்துள்ளது. விபத்தில் சிக்கி பலியான சிலர் தலை மற்றும் உடல்பாகங்கள் ஆங்காங்கே சாலையில் சிதறி கிடந்தன. அதனால் முதலில் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

விபத்தில் தற்போது 3 குழந்தைகள், 3 பெண்கள், கார் டிரைவர் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர். ஜனார்த்தன்(வயது 45), அவரது மகன் புனித்(4), சங்கனகல்லு கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார்(24) ஆகிய 3 பேர் மட்டும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சீரமைத்துள்ளோம். விபத்து குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே விபத்தில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகி உள்ளனர். விபத்தில் சிக்குவதற்கு முன்பு கடைசியாக அவர்கள் பிளிகிரி ரங்கநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தனர். அப்போது அவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விபத்தில் சிக்கி அவர்கள் இறந்துவிட்ட நிலையில், கடைசியாக எடுத்துக்கொண்ட குழு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

சோகத்தில் மூழ்கிய சங்கன்கல்லு கிராமம்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே விபத்தில் சிக்கி பல்லாரி(மாவட்டம்) தாலுகா சங்கன்கல்லு கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் பலியானார்கள். அதில் 3 குழந்தைகள், 3 பெண்கள் ஆகியோரும் அடங்குவர். விபத்தில் அவர்கள் சிக்கி இறந்தது பற்றி போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்பட கிராம மக்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

வைரலான விபத்து வீடியோ காட்சி

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். விபத்து தொடர்பான காட்சிகள் தனியார் பஸ்சின் முன்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் அதிவேகமாக வரும் கார், கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் மீது மோதுவது தெரியவந்துள்ளது. அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரின் நெஞ்சை பதை, பதைக்க வைக்கிறது.


Next Story