11 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை
அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூர்கேலா,
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு 11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
62 வயதான குற்றவாளி, லெப்ரிபாரா பிளாக்கில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது 11 சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த குற்றம் தொடர்பாக ஜூன் 14, 2016 அன்று கைது செய்யப்பட்ட அவர், அன்றிலிருந்து சிறையில் உள்ளார். இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட நீதிபதி மகேந்திர குமார் சுத்ரதர், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அவருக்கு 47,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.