வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 105 பேர் கைது ரூ.86 லட்சம் செல்போன்கள் பறிமுதல்
வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டல போலீசார் நகரில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல்களை கைது செய்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை பறிமுதல் செய்திருந்தார்கள். அந்த செல்போன்கள் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த செல்போன்களை போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் பார்வையிட்டார்கள். பின்னர் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன்களை பறித்து செல்வது, இரவு நேரங்களில் தனியாக செல்லும் நபர்களை தாக்கி செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மத்திய, தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய 4 மண்டலங்களில் உள்ள போலீசார், கடந்த ஒரு மாதமாக நகரில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 105 பேரை கைது செய்துள்ளனர். கைதான நபர்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாக 928 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.86 லட்சம் ஆகும். இதற்காக போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.