மே 10-ந் தேதி கர்நாடகத்திற்கு நல்லாட்சி வழங்கும் நாள்; டி.கே.சிவக்குமார் ஆரூடம்
மே 10-ந் தேதி கர்நாடகத்திற்கு நல்லாட்சி வழங்கும் நாள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
ஆட்சி அதிகாரம்
ஜனதா தளம் (எஸ்) கட்சியை சோ்த எஸ்.ஆர்.சீனிவாஸ், எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வந்தார். அக்கட்சி தலைவர்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.சீனிவாஸ், காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் அவர் காங்கிரசில் இணைந்தார். அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேசி கட்சிக்கு வரும்படி அழைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். எங்கள் கட்சியினர் உள்பட 17 எம்.எல்.ஏ.க்களை அவர்களின் வீட்டு கதவை தட்டி அழைத்து சென்று பா.ஜனதாவில் சேர்த்து கொண்டார்களே, அதை என்னவென்று சொல்வது. எங்கள் எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்று 4 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை பசவராஜ் பொம்மை அனுபவித்துள்ளார். என்னை குறை சொல்ல அவருக்கு என்ன தார்மிகம் உள்ளது.
சாபமாக மாறியது
அவர் பா.ஜனதா-காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியை நடத்தியுள்ளார். இந்த அரசு கர்நாடகத்திற்கு சாபமாக மாறியது. இந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துள்ளனர். தேர்தல் நாளான மே மாதம் 10-ந் தேதி ஊழலை விரட்டியடிக்கும் நாள். கர்நாடகத்திற்கு நல்லாட்சி வழங்கும் நாள். மாநிலத்தின் எதிர்காலத்தை மக்களே தீர்மானிக்கும் நாள் ஆகும்.
எஸ்.ஆர்.சீனிவாஸ் வருகையால் துமகூரு மட்டுமின்றி மைசூரு மண்டலத்தில் காங்கிரசுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். அடுத்து அரிசிகெரே தொகுதி எம்.எல்.ஏ. சிவலிங்கேகவுடா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். ஜனதா தளம் (எஸ்), பா.ஜனதா கட்சியினர் பலர் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். மக்களின் மனநிலை காங்கிரசை நோக்கி இருப்பதால் மாற்று கட்சியினர் காங்கிரசுக்கு வருகிறார்கள்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.