கர்நாடகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனராக தமிழர் நியமனம்
கர்நாடகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதில் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனராக தமிழரான ராம்பிரசாத் மனோகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
11 பேர் இடமாற்றம்
கர்நாடக அரசு அவ்வப்போது நிர்வாக சீர்திருத்தத்திற்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல் நேற்று கர்நாடக அரசு 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென்று இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர், முன் வகித்த பதவிகள், புதிய பொறுப்புகள் விவரம் பின்வருமாறு:-
ரஜனீஷ் கோயல்
* உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த ரஜனீஷ் கோயல், கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த ஐ.எஸ்.என். பிரசாத், கூடுதல் தலைமை கமிஷனர் மற்றும் வளர்ச்சி துறை கமிஷனராக இனி பணி செய்வார்.
* கூட்டுறவு துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த உமாசங்கர், வருவாய்த்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளராக பணி செய்து வந்த ரஷ்மி வி.மகேஷ், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக இனி தனது பணியை தொடர்வார்.
பங்கஜ்குமார் பாண்டே
* சுற்றுலாத்துறை செயலாளராக பணியாற்றிய பங்கஜ்குமார் பாண்டே, வணிகம் மற்றும் தொழில்துறை செயலாளராக இனி பணியாற்றுவார்.
* கனிம வளத்துறை இயக்குனராக பணியாற்றிய ராம்பிரசாத் மனோகர், பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் (எஸ்டேட்) ஆக இனி பணி செய்வார்.
* சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனராக பணியாற்றி வந்த வினோத் பிரியா, திறன் மேம்பாட்டு துறை கழக நிர்வாக இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
* கர்நாடக வீட்டுவசதி துறை கமிஷனராக பணியாற்றி வந்த ரமேஷ், கனிம வளத்துறை இயக்குனராக இனி பணியாற்றுவார்.
* பெங்களூரு மாநகராட்சியில் சிறப்பு கமிஷனராக (தொழிலாளர் நலன்) பணியாற்றிய சரத், விவசாயத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* கர்நாடக சிறு தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த சத்யபாமா, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனராக இனி பணியாற்றுவார்.
* கர்நாடக தேர்வாணைய நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சோமசேகர், கர்நாடக சிறு தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக இனி பணியாற்றுவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்
பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனராக (எஸ்டேட்) நியமிக்கப்பட்டுள்ள ராம்பிரசாத் மனோகர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். 2010-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். குழுவை சேர்ந்த இவர் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி, பல்லாரி கலெக்டர், வீட்டு வசதி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.