ரூ.11,157 கோடிக்கு பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
ரூ.11,157 கோடிக்கு புதிய வரிகள் இல்லாத பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திரா உணவகங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
உபரி பட்ஜெட்
2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் கடந்த மாதம்(பிப்ரவரி) மாதம் 17-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங், தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆகியோரின் முன்னிலையில் நிதித்துறை சிறப்பு கமிஷனர் ஜெயராம் ராயபுரா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை, வரிகள் உயர்த்தப்படவும் இல்லை. ரூ.11 ஆயிரத்து 157 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.6.14 கோடி உபரியாக பட்ஜெட் இடம் பெற்றுள்ளது. அதனால் இது உபரி பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய மேம்பாலங்கள், சுரங்க பாலங்கள், பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் இல்லாத சாலைகளை உருவாக்கவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பின்வருமாறு:-
ரெயில்வே மேம்பாலங்கள்
* புதிய கட்டிட திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.
* மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு மண்டலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வீதம் 8 மண்டலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.8 கோடி ஒதுக்கீடு.
* உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* கால்நடை இறைச்சி கூடங்களை பராமரிக்க ரூ.1 கோடி நிதி.
* மின் தகன மையங்கள் மற்றும் சுடுகாடுகளை பராமரிக்க ரூ.7.74 கோடி ஒதுக்கீடு.
* நகரில் துணை சாலைகள், சிறிய சாலைகளை மேம்படுத்த ரூ.60.10 கோடி நிதி.
* ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாலங்கள் கட்டுவதற்கு ரூ.23.11 கோடி ஒதுக்கீடு.
* வார்டுகளில் சாலை குழிகளை மூடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 243 வார்டுகளுக்கும் தலா ரூ.75 லட்சம் ஒதுக்கீடு.
* மழைநீர் கால்வாய்களை பராமரிக்க ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
மின் தகன மையங்கள்
* பருவமழை காலத்தில் அவசர பணிகளை மேற்கொள்ள ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* தெருவிளக்குகள் பராமரிப்புக்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு.
* ஏரிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பராமரிக்க ரூ.35 கோடி நிதி.
* திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த ரூ.100 கோடி நிதி.
* நகரில் புதிய பூங்காக்களை உருவாக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* புதிய மின் தகன மையங்களை அமைக்க ரூ.30 கோடி நிதி.
தங்கும் விடுதிகள்
* நகரில் 7 முக்கிய சாலை சந்திப்புகளை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மேயர் தன்னிச்சையாக முடிவு எடுத்து பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி, தலைமை கமிஷனருக்கு ரூ.50 கோடி, பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரிக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* உழைக்கும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
* 'ஒன்டி மனே' (தனி வீடு) திட்டத்திற்கு பயனாளிகளுக்கு மானியம் வழங்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பள்ளி குழந்தைகளுக்கு மடிக்கணினி வழங்க ரூ.25 கோடி நிதி.
இந்திரா உணவகங்கள்
* தகுதியான பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் வழங்க ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்திரா உணவகங்களுக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மரங்கள் கணக்கெடுப்பு பணிக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தெரு வியாபாரிகளுக்கு வியாபார மண்டலத்தை உருவாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு.
* மேம்பாலங்கள், சுரங்க பாலங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3-வது முறையாக அதிகாரிகள் தாக்கல் செய்த பட்ஜெட்
பெங்களூரு மாநகராட்சியில் மன்ற கவுன்சிலர்களின் பதவி காலம் கடந்த 2020-ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. மாநகராட்சிக்கு கடந்த 2½ ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையே வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 243 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகாரிகளே மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள். 3-வது ஆண்டாக நேற்று அதிகாரிகள் பட்ஜெட் தாக்கல் செய்தனர். கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே எந்த தகவலையும் தெரிவிக்காமல் நள்ளிரவில் பட்ஜெட் தாக்கல் செய்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.