அசாம்: அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 12 பேர் கைது
வங்காளதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 12 பேரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தின் பார்பேடா, கவுகாத்தி மற்றும் மொரிஹன் ஆகிய மாவட்டங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து மாநில போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வங்காளதேசத்தில் இயங்கி வரும் அன்சருல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முப்தி முஸ்தபா, அம்ருதின் அன்சாரி, மமுன் ரஷித் உள்பட 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அன்சருல் இஸ்லாம் வங்காளதேசத்தில் இயங்கி வரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் கிளை பயங்கரவாத அமைப்பாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் முப்தி முஸ்தபா என்ற நபர் அன்சருல் இஸ்லாம் பயங்கரவாத அமைப்புடன் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், வெளிநாட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளிக்கு முஸ்தபா தான் நடத்தி வந்த மதப்பள்ளியில் தங்க வைத்து அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பவைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மொரிஹன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் சொருஷாலா என்ற கிராமத்தில் தனியாக இஸ்லாமிய மதப்பள்ளி நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
அதேபோல், மொரிஹன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய மதப்பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றி வந்த மேலும் 7 பேருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்ப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்காளதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 12 பேர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.