வீடு இல்லாதோருக்கு வீடுகள் கட்டித்தர 16 ஏக்கர் நிலத்தை உடனே ஒதுக்க வேண்டும்- ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கோரிக்கை
வீடு இல்லாதோருக்கு வீடுகள் கட்டித்தர 16 ஏக்கர் நிலத்தை உடனே ஒதுக்க வேண்டும் என்று ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
ஆலோசனை கூட்டம்
கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தாலுகாக்கள் தோறும் நடக்க உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:
வீடுகள் கட்ட 16 ஏக்கர் நிலம்
கோலார் தங்கவயலில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் அமைக்க அரசு 25 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது. கோலார் தங்கவயலை தனி தாலுகாவாக அறிவித்த பின்னர் தனியாக ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு நிலம் ஒதுக்கவேண்டியது அரசின் கடமையாகும். அதன்படி மாவட்ட நிர்வாகம் 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால் நிலத்தின் உரிமையாளர்களுக்கு கொடுக்கவேண்டிய நிதியை அரசு இன்னும் ஒதுக்கவில்லை. எனவே நிலத்திற்கான நிதியை அரசு உடனே ஒதுக்கீடு செய்யவேண்டும்.
அதேபோல் கோலார் தங்கவயலில் வீடுகள் இல்லாதவர்களுக்கு ஆஸ்ரயா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்க தேவையான 16 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் உடனே ஒதுக்கீடு செய்யவேண்டும். கோலார் தங்கவயலில் சரக்கு லாரிகள் வந்து செல்லும் வகையில் சரக்கு லாரிகள் முனையம் அமைக்க இட வசதி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனே நிறைவேற்றாவிட்டால் கலெக்டர் அலுவலம் எதிரே தர்ணா போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.