'கர்நாடகத்தில் 1,600 டன் லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன' - மத்திய இணை மந்திரி தகவல்


கர்நாடகத்தில் 1,600 டன் லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன - மத்திய இணை மந்திரி தகவல்
x

கர்நாடகத்தில் 1,600 டன் லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங், கர்நாடக மாநிலத்தில் உள்ள 2 மாவட்டங்களில் அதிக அளவிலான லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

"அணுசக்தி துறையின் ஒரு அங்கமாக விளங்கும் 'ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு கனிமங்கள் இயக்குநரகம்'(AMD), கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மற்றும் யாத்கிரி ஆகிய 2 மாவட்டங்களில் அதிக அளவிலான லித்தியம் படிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

இதன்படி மண்டியா மாவட்டத்தில் உள்ள மர்லாகல்லா பகுதியில் உள்ளா 1,600 டன் லித்தியம் இருப்பது தெரியவந்துள்ளது. அதே போல் யாத்கிரி மாவட்டத்தில் உள்ள லித்தியம் படிமங்களின் அளவு குறித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

மேலும் சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தின் சில பகுதிகளில் லித்தியம் படிமங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதே சமயம் ராஜஸ்தான், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் லித்தியம் படிமங்கள் இருப்பதற்கான அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ளன."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story