இந்தியா-சீனா இடையிலான 16வது சுற்று பேச்சுவார்த்தை சுஷூல்-மோல்டோ எல்லை பகுதியில் தொடக்கம்
இந்தியா மற்றும் சீனா இடையிலான 16வது சுற்று பேச்சுவார்த்தையில் சீனாவின் ஜே-10 போர் விமானம் அத்துமீறிய விவகாரம் எழுப்பப்படும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி,
கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன.
எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது. இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில் இந்தியா தரப்பில் ராணுவ 14வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்கிறார் என தகவல் வெளியானது. கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள ரோந்து புள்ளி 15ல் இருந்து படைகளை திரும்பப்பெறுவதுடன், கிழக்கு லடாக்கில் அமைதியை உறுதிப்படுத்துமாறு சீனாவை இந்தியா வலியுறுத்தும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு லடாக்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்காகவும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, இந்தியா தரப்பில் 14வது படை பிரிவின் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ. சென்குப்தா பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 4 மாத இடைவெளிக்கு பின்பு இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு படைகளும் குறைந்தது நவீன ஆயுதங்களுடன் கூடிய தலா 60 ஆயிரம் படை வீரர்களை குவித்து உள்ளன.
இந்த சந்திப்பில், சீனாவின் ஜே-10 போர் விமானம் ஒன்று, பறக்க தடை விதிக்கப்பட்ட இந்திய மண்டலத்திற்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம் மற்றும் மோதல் பகுதியில் பறந்தது பற்றியும் இந்தியா எழுப்பும் என கூறப்படுகிறது.