171 சோதனை சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் கண்காணிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவதை தடுக்க தமிழ்நாடு உள்பட 6 மாநில எல்லைகளில் 171 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:-
171 சோதனை சாவடிகள்
கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து, தேர்தலுக்கு முன்னதாக மாதிரி நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து, வாகன சோதனையில் ஈடுபடும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அண்டை மாநிலங்களின் எல்லையையொட்டி உள்ள 19 மாவட்டங்களில் 171 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம், கோவா ஆகிய 6 மாநிலங்களின் எல்லையில் உள்ள கர்நாடகத்தின் 19 மாவட்டங்களிலும் ஒட்டு மொத்தமாக 171 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது..
24 மணிநேரமும் கண்காணிப்பு
இந்த சோதனை சாவடிகளில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், மாநில ஜி.எஸ்.டி. அதிகாரிகள், மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகள், கடலோர காவல் படை, வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின்
உத்தரவுப்படி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் சோதனை நடத்தி, தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்து சென்றால், அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்காக 24 மணிநேரமும் 171 சோதனை சாவடிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, 24 மணிநேரமும் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு வருகின்றனர். இதுபோன்று, ஒவ்வொரு மாவட்ட எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.