முஸ்லிம் இளம்பெண்ணுடன் ஓட்டலுக்கு வந்த இந்து வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
முஸ்லிம் இளம்பெண்ணுடன் ஓட்டலுக்கு வந்த இந்து வாலிபரை தாக்கி வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:-
முஸ்லிம் இளம்பெண்
சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) டவுன் கார்கானே பேட்டே பகுதியில் ஒரு தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு சிக்பள்ளாப்பூர் டவுன் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணும், சிட்லகட்டா தாலுகா திப்பூரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உணவு சாப்பிட வந்தனர். அந்த இளம்பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அந்த வாலிபர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். மேலும் அவர் சிக்பள்ளாப்பூர் டவுன் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அந்த இளம்பெண்ணும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் அவர் பெங்களூரு அருகே எலகங்காவில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர்கள் இருவரும் ஓட்டலில் இருந்ததைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்தனர்.
கைது
அவர்கள் இளம்பெண்ணுடன் இருந்த வாலிபரை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த வாலிபரை அண்ணன் என்று அழைக்குமாறு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இதுபற்றி சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் நக்கலகுண்டே பகுதியைச் சேர்ந்த வாகித், சதாம் ஆகியோர் ஆவர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள இம்ரான் என்பவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.