சொகுசு கார்களை திருடிய 2 பேர் சிக்கினர்
பெங்களூருவில் விற்பனை செய்து தருவதாக கூறி சொகுசு கார்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 கோடி மதிப்பிலான 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
பெங்களூரு:-
சொகுசு கார் திருட்டு
பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். தொழில் அதிபரான இவர் பென்ஸ் சொகுசு காரை வைத்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீசின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த சொகுசு காரை மர்மநபர்கள் திருடி சென்று இருந்தனர். இதுகுறித்து கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்து இருந்தார்.
சதீஷ் புகார் அளித்திருந்த சிறிது நாட்களில் ராஜா என்பவரும் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது சொகுசு காரை விற்று தருவதாக கூறி ஒருவர் ஓட்டி சென்று திருடிவிட்டதாக கூறி இருந்தார். இந்த 2 புகார்களின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது காரை திருடியதும், விற்று தருவதாக கூறி காரை திருடியதும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
ரூ.8.92 கோடி
இந்த நிலையில் சதீசின் காரை திருடியதாக ஜப்ரான் என்பவரையும், ராஜாவின் காரை விற்று தருவதாக கூறி திருடியதாக ஹேமசந்திரா என்பவரையும் கப்பன் பார்க் போலீசார் கைது செய்து இருந்தனர். விசாரணையில் இவர்கள் 2 பேரும் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து விலை உயர்ந்த சொகுசு கார்களை திருடுவது மற்றும் விற்பனை செய்து தருவதாக கூறி ஓட்டி சென்று திருடி சென்றது தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 12 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.8.92 கோடி ஆகும். கைதான 2 பேர் மீதும் கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.