அங்கன்வாடி மையத்தில் குக்கர் வெடித்து 2 குழந்தைகள் காயம்
பாகல்கோட்டையில் அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்தபோது குக்கர் வெடித்து 2 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
பெங்களூரு:-
குக்கர் வெடித்தது
பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா சவலகி அருகே படகி வஸ்தி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் படகி வஸ்தி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகிறார்கள். இங்கு குழந்தைகளுக்கு சத்துணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி மையத்தில் உதவியாளர் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று குக்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 2 குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
குக்கர் வெடித்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து காயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேரையும் மீட்டு ஜமகண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு குழந்தைக்கு காதிலும், மற்றொரு குழந்தைக்கு தலையிலும் காயம் ஏற்பட்டிருந்தது. விசாரணையில் காயமடைந்த குழந்தைகள் அதேப்பகுதியை சேர்ந்த சமர்த் (வயது 4), அத்விக் (3) என்பது தெரியவந்தது.
சிறு காயங்கள்
inஇதுபற்றி தகவல் அறிந்ததும் ஜமகண்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி அனுராதா, அந்த அங்கன்வாடி மையத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சமையல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. குழந்தைகளுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இதுகுறித்து ஜமகண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.