ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து நாளை முதல் 2 நாட்கள் ஆலோசனை-டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ராகுல்காந்தி பாதயாத்திரை
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் 'பாரத் ஜோடோ' பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இதுகுறித்து ஆலோசிப்பதற்காக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாட்கள் பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கலந்து கொள்கிறார். இதில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்தும், குழுக்கள் அமைப்பது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். வருகிற 1-ந் தேதி காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய்சிங், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பெங்களூரு வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பா.ஜனதா தலைவர்களுக்கு தங்கள் அரசின் வளர்ச்சி பணிகளை மக்களிடம் சொல்ல முடியவில்லை. அதனால் அவர்கள் வீரசாவர்க்கர் படத்தை வைத்து கொண்டு சுற்றுகிறார்கள். மேலும் மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டு சமுதாயத்தை உடைக்க முயற்சி செய்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் வீரசாவர்க்கர் படத்தை வைக்கிறார்கள். விநாயகருக்கும், வீரசாவர்க்கருக்கும் என்ன தொடர்பு உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர்
பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகளை கொண்டு சில மந்திரிகள் முறைகேடு செய்துள்ளனர். அந்த மந்திரிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடனடியாக கைவிட வேண்டும். சட்டசபை கூட்டத்தொடரை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
அந்த கூட்டத்தில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.