மின்வாரிய என்ஜினீயர்கள் 2 பேர் கைது
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு சும்மனஹள்ளி அருகே வசித்து வருபவர் ஆனந்த்ராஜ். இவர், சும்மனஹள்ளியில் பெஸ்காம் (மின்வாரியம்) அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்திருந்தார். அதில், தனது கடைக்கு வழங்கும் 30 எச்.பி. மின் வினியோத்தை 60 எச்.பி.யாக உயர்த்தும்படி கூறி இருந்தார். அந்த மனுவை பரிசீலித்த சும்மனஹள்ளி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் என்ஜினீயர்களான பாரதி மற்றும் கனல்குமார், 60 எச்.பி.யாக மாற்றுவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் ரூ.20 ஆயிரம் கொடுப்பதாக ஆனந்த்ராஜ் கூறியுள்ளார். இதற்கு 2 பேரும் சம்மதித்துள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்த்ராஜ், இதுபற்றி லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். போலீசார் கூறிய அறிவுரையின் படி நேற்று முன்தினம் என்ஜினீயர்கள் பாரதி, கனல்குமாரை சந்தித்து ரூ.20 ஆயிரத்தை ஆனந்த்ராஜ் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லோக் அயுக்தா போலீசார், பாரதி, கனல்குமாரை கைது செய்தார்கள்.