மெட்ரோ நிர்வாக இயக்குனரிடம் 2 மணிநேரம் விசாரணை
இரும்பு கம்பிகள் விழுந்து தாய்-குழந்தை பலியான வழக்கில் மெட்ரோ நிர்வாக இயக்குனரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பெங்களூரு:-
பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் தூணுக்கான இரும்பு கம்பிகள் விழுந்து தாய் மற்றும் குழந்தை பலியாகினர். இதுகுறித்து கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மெட்ரோ ரெயில் என்ஜினீயர்கள், மெட்ரோ ரெயில் ஒப்பந்ததாரர்கள் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் மெட்ரோ ரெயில் என்ஜினீயர்கள், ஒப்பந்ததாரர்களிடமும் போலீசார் விசாரித்துள்ளனர். அதுபோல், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேசையும் விசாரணைக்கு ஆஜராக கோவிந்தபுரா போலீசாார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். அதன்படி, கோவிந்தபுரா போலீசார் முன்னிலையில் அஞ்சும் பர்வேஸ் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் 2 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மெட்ரோ ரெயில் இரும்பு கம்பிகள் விழுவதற்கான காரணம், என்ஜினீயர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் அலட்சியம் குறித்து போலீசார், அஞ்சும் பர்வேசிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் மெட்ரோ நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் நிருபர்களிடம் கூறுகையில், மெட்ரோ விபத்து குறித்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததுடன், அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும் அளித்துள்ளேன். என்னால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை. ஐ.ஐ.எஸ்.சி. நிபுணர்கள் குழுவினர் விபத்து குறித்து அறிக்கை அளித்துள்ளனர். அதனை பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.