ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.2 லட்சம் அபேஸ்
வங்கி அதிகாரி போல பேசி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.2 லட்சம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உப்பள்ளி:-
உப்பள்ளி நகரம் கேஷ்வாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன் (வயது 67). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், நான் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து பேசுகிறேன். வாடிக்கையாளர் விவரத்தை (கே.ஒய்.சி.) புதுப்பிக்க வேண்டி உள்ளது. இதனால், உங்களது வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய லட்சுமணன், அந்த நபர் கேட்ட விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.90 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி வங்கிக்கு சென்று விசாரித்தார். வங்கியில் இருந்து யாரும் அவ்வாறு பேசவில்லை என தெரிவித்தனர். அப்போது தான் யாரோ மர்மநபர், வங்கி அதிகாரி போல பேசி, ரூ.1.90 லட்சத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.