காட்டு யானை தாக்கி இளம்பெண் உள்பட 2 பேர் சாவு
கடபா தாலுகாவில் காட்டு யானை தாக்கி இளம்பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை எடுக்க விடாமல் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்களூரு:
காட்டு யானை அட்டகாசம்
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா குற்றப்பாடி அருகே மீனாடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து கடந்த மாதங்களாக காட்டு யானைகள் வெளியேறி மீனாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் காட்டு யானைகள், கிராமத்துக்குள்ளும் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள், வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
மேலும் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், அங்கு காட்டு யானை தாக்கி இளம்பெண் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றி விவரம் பின்வருமாறு:-
2 பேர் சாவு
மீனாடி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 21). இவர் பேரடுக்கா பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்து வந்தார். ரஞ்சிதா நேற்று காலை பால் கூட்டுறவு சங்கத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது பக்கத்து கிராமமான கர்மனே பகுதியில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அவரை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதனால் அவர் அலறி கூச்சலிட்டுள்ளார்.
அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அந்தப்பகுதியை சேர்ந்த ரமேஷ் ராய் (55) என்பவர் விரைந்து வந்தார். அவர், காட்டு யானையிடம் இருந்து ரஞ்சிதாவை காப்பாற்ற முயன்றார். ஆனாலும், காட்டு யானை அவரையும் தும்பிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் ரமேஷ் ராய் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ரஞ்சிதாவையும் காலால் மிதித்தது. அப்போது அங்கு வந்த மக்கள், காட்டு யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
யானை தாக்கியதில் உயிருக்கு போராடிய ரஞ்சிதாவை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
போராட்டம்-வாக்குவாதம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடபா போலீசாரும், வனத்துறையினரும் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். ஆனால், அவர்கள் 2 பேரின் உடல்களையும் எடுக்க விடாமல் மீனாடி, கர்மனே, குற்றப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் போலீசார் மற்றும் வனத்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதுபற்றி வனத்துறையினருக்கு தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காட்டு யானைகளின் நடமாட்டத்தை இந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து யூ-டியூப்பில் வெளியிட்டார். ஆனால், வனத்துறையினர் கடபா போலீசில் புகார் கொடுத்து அந்த வீடியோவை நீக்கி உள்ளனர். காட்டு யானை அட்டகாசத்தை தடுக்காத அதிகாரிகள், வீடியோவை மட்டும் ஏன் நீக்க சொல்ல வேண்டும். மந்திரியும், கலெக்டரும் வரும் வரை உடல்களை வைத்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் மாவட்ட வனத்துறை அதிகாரி விரைந்து வந்து, போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இன்று (நேற்று) மாலைக்குள் நாகரஒலே, துபாரே முகாம்களில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்டு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார், ரஞ்சிதா மற்றும் ரமேசின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் - கலெக்டர் ரவிக்குமார்
காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் கூறுகையில், காட்டு யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். ரஞ்சிதாவின் சகோதரிக்கு அரசு வேலை கொடுக்கப்படும். கடபா தாலுகாவில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று (நேற்று) முதல் வனத்துறையினர் காட்டு யானையை பிடிக்கும் பணியை தொடங்கி உள்ளனர் என்றார்.