பெங்களூருவில் பெண்ணை கொன்று உடலை எரித்த வழக்கில் கணவர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில் பெண்ணை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடத்தையில் சந்தேகத்தால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு:
எரிந்த நிலையில் பெண் உடல்
பெங்களூரு கெங்கேரி அருகே ராமசந்திரா என்ற கிராமத்தில் கடந்த 3-ந் தேதி ஒரு பெண் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கெங்கேரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் நகினா கானம் (வயது 25) என்பதும், அவர் தனது கணவருடன் கெங்கேரி உபநகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் நகினா கானம் இறந்தது முதல், அவரது கணவர் முகமது ரபீக் மாயமாகி விட்டதும் தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் விஜயாப்புராவில் தலைமறைவாக இருந்த முகமது ரபீக்கை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
நடத்தையில் சந்தேகம்
அப்போது மனைவி நகினா கானமை, நண்பரான பிரஜ்வல் என்பவரின் உதவியுடன் கொலை செய்து உடலை எரித்ததை முகமது ரபீக் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த பிரஜ்வல் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நகினா கானத்தின் நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை ராமசந்திரா கிராமத்திற்கு அழைத்து சென்ற முகமது ரபீக் அங்கு வைத்து நகினா கானத்தின் தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததும், பின்னர் போலீசார் அடையாளம் கண்டுவிட கூடாது என்பதற்காக தீ வைத்து எரித்ததும் தெரியவந்து உள்ளது. கைதான 2 பேர் மீதும் கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.