திருட்டு வழக்கில் 2 பேர் கைது ரூ.6 லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் மீட்பு
உப்பள்ளியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
உப்பள்ளி:-
நகைகள் திருட்டு
தார்வார் மாவட்டம் உப்பள்ளி வித்யாநகர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சிரூர்பார்க் பகுதியில் கிரீன் கப் என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பிரியங்கா கபாடே என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டிவிட்டு, உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்.
இந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த பிரியங்கா, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
2 பேர் சிக்கினர்
இது குறித்து அவர் வித்யாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரியங்காவின் வீட்டில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிசென்று விட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அங்கு வந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அதை வைத்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்.
ரூ.6 லட்சம் நகைகள் மீட்பு
விசாரணையில் அவர்கள் சிரூர்பார்க் பகுதியில் நடந்த திருட்டில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களில் ஒருவர் உப்பள்ளி அக்கிபேட்டையை சேர்ந்த பிரேம்(வயது 26) என்பதும், மற்றொருவர் உப்பள்ளி தொரவி பகுதியை சேர்ந்த கணேஷ்(28) என்பதும் தெரியவந்தது. பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவில் திருடி வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மீட்டனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.