பெங்களூருவில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது


பெங்களூருவில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து வந்த  தமிழ்நாட்டை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது
x

பெங்களூருவில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்துவந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்துவந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் கைது

பெங்களூரு தெற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், புட்டேனஹள்ளி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையர்களான தமிழ்நாட்டை சேர்ந்த சந்தோஷ்(வயது 35) மற்றும் பெங்களூருவை சேர்ந்த ரவி(35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் 2 பேரும் பெங்களூரு தெற்கு மண்டலம் உள்பட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு ஆட்டோவில் சுற்றித்திரிவார்கள். அப்போது தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சென்று, அவர்களது கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை பறிப்பதை 2 பேரும் தொழிலாக வைத்திருந்தார்கள். கைதானவர்களில் சந்தோஷ் பி.காம் பட்டதாரி ஆவார். வீடுகளில் உள்கட்டமைப்பு செய்து கொடுக்கும் வேலையை அவர் செய்து வந்துள்ளார்.

ரூ.1½ கோடி மதிப்பு

இவர்கள் பகல் மற்றும் இரவுநேரத்திலும் தங்க சங்கிலி பறித்து வந்துள்ளனர். பஸ் நிலையங்கள் அருகே நின்று கொண்டு அந்த வழியாக வரும் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பதை 2 பேரும் வாடிக்கையாக வைத்திருந்தனர். கைதான 2 பேர் மீதும் பெங்களூருவில் உள்ள 32 போலீஸ் நிலையங்களில் 51 தங்க சங்கிலி பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

புட்டேனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது தான், 2 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். அவர்களிடமிருந்து ரூ.1½ கோடி மதிப்பிலான 2 கிலோ 510 கிராம் தங்க நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு உள்ளன. கைதான 2 பேர் மீதும் புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது.

பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்

முன்னதாக கைதான 2 நபா்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி இன்று காலையில் பார்வையிட்டார். அப்போது அவருடன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல்உடன் இருந்தார்.


Next Story