குழந்தைகளிடையேயான மோதல் குடும்ப மோதலானது - பெண் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை
குழந்தைகள் இடையேயான மோதல் குடும்ப மோதலுக்கு வழிவகுத்து 2 பேர் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் சலீம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மெஹ்ராஜ் (35) மற்றும் இக்பால். அண்டை வீட்டாரான இவர்களின் குழந்தைகள் நேற்றும் விளையாட்டிக்கொண்டிந்தனர்.
அப்போது, குழந்தைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மெஹ்ராஜ் மற்றும் இக்பால் இடையேயான குடும்ப பிரச்சினையாக மாறியது. இரு குடும்பத்தினரும் மாறி மாறி வாக்குவாதம் மற்றும் சண்டையிட்டனர்.
இதனிடையே, கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்திற்கு வழிபாடு நடத்த மெஹ்ராஜ் சென்றுள்ளார். அப்போது, அவரை இடைமறித்த இக்பால் குடும்பத்தினர் மெஹ்ராஜை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த மெஹ்ராஜை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மெஹ்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மெஹ்ராஜின் உறவினர்கள் இக்பாலின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இக்பாலின் மனைவி பெரோஷ் (வயது 45) மட்டும் இருந்த நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டனர். மெஹ்ராஜின் உறவினர்கள் சுட்டதில் படுகாயமடைந்த பெரோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து மெஹ்ராஜ் மற்றும் இக்பாலின் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குழந்தைகள் இடையேயான மோதல் குடும்ப மோதலான நிலையில் இரு குடும்பத்தினரும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.