ஹாசனில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
ஹாசனில் குளத்தில் குளிப்பதற்கு சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
ஹாசன்:
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா அருகே சானேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் ஆகாஷ் (வயது 13). அதேப்பகுதியை சேர்ந்த சீனிவாஸ் என்பவரின் மகன் லோகேஷ் (13). இவர்கள் 2 பேரும் சரவணபெலகோலாவில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். தசரா விடுமுறை என்பதால் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று ஆகாஷ் மற்றும் லோகேஷ் உள்பட 3 பேர் மஞ்சுநாதபுரா பகுதியில் உள்ள குளத்திற்கு குளிப்பதற்கு சென்றனர். அப்போது ஆகாஷ் மற்றும் லோகேஷ் 2 பேரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்கள், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சரவணபெலகோலா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணபெலகோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.