பா.ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு வழக்கு: 'அல் உம்மா' பயங்கரவாதிகள் 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை
2013-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பா.ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த அல் உம்மா பயங்கரவாதிகள் 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
குண்டுவெடிப்பு
பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் பா.ஜனதா தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே கடந்த 2013-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதுதொடர்பாக வயாலி காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 20 போலீசார், பொதுமக்கள் என 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
விசாரணையில் இந்த செயலுக்கு பின்னால் பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக தெரிந்தது. இதையடுத்து அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் தமிழகத்தின் கோவை மாவட்டம் அம்பாசமுத்திர பகுதியை சேர்ந்த டேனியல் பிரகாஷ் மற்றும் ஜான் நசீர் ஆகியோர், அல் உம்மா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து, இந்த திட்டத்தை நடத்தியது தெரிந்தது.
2 பேருக்கு சிறை
இதையடுத்து அவர்கள் 2 பேர் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்து வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பான வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து சிறப்பு நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் பெங்களூரு மல்லேசுவரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தமிழகத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.