ரேஷன் கடைகளில் 2 முறை கைரேகை பதிவு செய்வது கட்டாயம் நீண்ட நேரம் ஆவதால் பயனாளிகள் அவதி
கர்நாடகத்தில் ரேஷன் கடைகளில் 2 முறை கைரேகையை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டு இருப்பதால் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் ஆவதாக பயனாளிகள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
2 முறை கைரேகை பதிவு
கர்நாடகத்தில் ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கர்நாடக அரசின் அன்னபாக்கியா மற்றும் மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன மற்றும் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த இலவச அரிசியை பெற ரேஷன் கடைகளில் பயனாளிகள் 2 முறை கைரேகையை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று கர்நாடக அரசின் உணவுத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ரேஷன் கடைகளில் பயனாளிகள் அரிசி பெற நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் அங்கு 'சர்வர்' மிகவும் மெதுவாக செயல்படுவதால் ஒரு முறை கை ரேகை வைத்து அரிசி பெறவே நீண்ட நேரம் ஆவதாக சொல்கிறார்கள்.
பயனாளிகள் அவதி
இப்போது ஒரு பயனாளி கரீப் கல்யாண் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றுக்காக 2 முறை கைரேகை வைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த நடைமுறையை முடிக்க நீண்ட நேரம் ஆவதால் பயனாளிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு வரிசையில் நீண்ட நேரம் நிற்பதால், வேலைக்கு செல்ல முடிவது இல்லை என்றும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு நாளைக்கு 100 பேருக்கு அரிசி வழங்கும்பட்சத்தில் 2 முறை கைரேகை வைக்கும் நடைமுறையால் 50 பேருக்கு மட்டுமே அரிசி வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். இதனால் பழைய முறையை பின்பற்றியே ரேஷன் அரிசி வழங்க வேண்டும் என்று பயனாளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.