தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 2 வாலிபர்கள் கைது
பெங்களூரு அருகே பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் ‘பொறி’ வைத்து பிடித்துள்ளனர்.
பெங்களூரு:
ஒரே நாளில் 2 சம்பவம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா அருகே சாந்திநகரை சேர்ந்தவர் பாரதி. இவர், நேற்று முன்தினம் தனது மாமா, அத்தையுடன் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பாரதியிடம் இருந்து 23 கிராம் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அதுபோல், 65 வயதான உகுமா பாய் கழுத்தில் கிடந்த 25 கிராம் தங்க சங்கிலியையும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.
ஒரே நாளில் 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்ததால், கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொட்டபள்ளாப்புரா போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்து வந்தனர்.
2 வாலிபர்கள் கைது
இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் ஒரே நாளில் 2 பெண்களிடம் நகை பறித்ததாக தொட்டபள்ளாப்புரா தாலுகா கெத்தலு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 23), பிரவீன் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். 2 பேரிடமும் நகை பறித்ததையும் ஒப்புக் கொண்டனர். சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் 2 பேரும், சங்கிலியை பறித்து விட்டு பல இடங்களில் சுற்றிவிட்டு இரவில் வீட்டுக்கு வந்த போது, அங்கு ஏற்கனவே காத்திருந்த போலீசார், சுப்பிரமணி, பிரவீனை கைது செய்தனர்.
வீட்டில் வைத்து மடக்கினர்
ஒரே நாளில் 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டதால், மர்மநபர்களை பிடிக்க தீவிரம் காட்டிய போலீசார், சமீபத்தில் தங்க சங்கிலி பறிக்க முயன்றதாக சிக்கி இருந்த சுப்பிரமணி, பிரவீன் மீது சந்தேகம் எழுந்தது. உடனே அவர்களது வீட்டுக்கு போலீசார் சென்றிருந்தனர். சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு விட்டு 2 பேரும் வீட்டுக்கு வந்த போது, அவர்களை போலீசார் பொறி வைத்து பிடித்தது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் மீதும் தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.