மாடு கடத்த முயன்ற 2 வாலிபர்கள் சிக்கினர்
பஜ்பேயில் மாடு கடத்த முயன்ற 2 வாலிபர்கள் சிக்கினர்
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் மாடுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் பஜ்பே பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அதன்படி நேற்று சோதனை செய்தபோது, மங்களூருவில் இருந்து பஜ்பேவை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அந்த சரக்கு வாகனத்தை மடக்கினர். அப்போது சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் அதை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி தப்பியோட முயற்சித்தனர். இதையடுத்து பார்த்த போலீசார், அவர்களை துரத்தி சென்றனர். அப்போது டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் போலீசார் அவர்கள் வந்த சரக்கு வாகனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அதில் 2 பசுமாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கைதானவர்கள் பஜ்பே பத்ரகெரே பகுதியை சேர்ந்த முகமது சைபுதீன் (வயது 19), பொற்கொடியை சேர்ந்த அப்துல் ரஷாக் (19) என்று தெரியவந்தது. இவர்கள் சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.