கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்; காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு


கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்; காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
x

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெலகாவி:

ஜனசங்கல்ப யாத்திரை

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். ஆளும் பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை என்ற பெயரில் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

அதேபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 'ஜன த்வனி' (மக்கள் குரல்) என்ற பெயரில் பஸ் யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது.

பெலகாவியில் இருந்து இந்த பயணம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பயணத்தை தொடங்கியுள்ளனர். முதல் நாளில் சிக்கோடியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

வேதனைகள்

இன்று (அதாவது நேற்று) வரலாற்று சிறப்பு மிக்க நாள். மக்களின் பிரச்சினைகள், வலிகள், வேதனைகள், கருத்துகளை அறியும் பொருட்டு நாங்கள் இந்த மக்கள் குரல் பயணத்தை தொடங்கியுள்ளோம். உங்களுக்கு பலம் கொடுக்கவும், உங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதே இந்த பயணத்தின் நோக்கம் ஆகும்.

1924-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தி தலைமை ஏற்று சுதந்திர போராட்டத்தை நடத்தினார். நாங்கள் அதே இடத்தில் இருந்து தான் இந்த பஸ் பயணத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் போருக்கு புறப்பட்டுள்ளோம். காந்தியின் கிணற்று நீரை எடுத்து அதை நிலத்தில் ஊற்றி துடைத்துவிட்டு, இந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று வந்துள்ளோம்.

இதுவரை நிறைவேற்றவில்லை

இந்த பயணத்தின்போது 5 முக்கியமான வாக்குறுதிகளை அறிவிக்க முடிவு செய்துள்ளோம். அதில் முதல் வாக்குறுதி என்னவென்றால், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு மாதந்தோறும் தலா 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம். சொன்னபடி நடந்து கொள்வோம். கடந்த காலங்களில் நாங்கள் அவ்வாறு நடந்து கொண்டுள்ளோம்.

விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். உங்களின் நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த வாக்குறுதியை அளிக்கிறோம். இதனால் உங்களின் மாதாந்திர குடும்ப செலவு குறையும். நிதி சுமையும் குறையும். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, விவசாயிகளின் கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று பா.ஜனதா கூறியது. அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

தவறு நடக்கவில்லை

விவசாய பம்புசெட்டு களுக்கு 10 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக கூறினார்கள். நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது, விவசாயிகளுக்கு தினமும் 7 மணி நேரம் மின்சாரம் வழங்கினோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆபரேஷன் தாமரை மூலம் பின்வாசல் வழியாக பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வந்தனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. அதனால் தான் நாங்கள் பா.ஜனதாவினர் குற்ற புராணத்தை வெளியிட்டுள்ளோம்.

மந்திரிகள் எந்த தவறு செய்தாலும் அவர்கள் தவறு செய்யவில்லை என்று 'பி' அறிக்கையை போலீசார் தாக்கல் செய்கிறாா்கள். மத விஷ விதைகளை மக்களின் மனதில் பா.ஜனதாவினர் விதைக்கிறார்கள். வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்து, மேலும் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இட ஒதுக்கீடு விஷயத்தில் பொய் தகவல்களை கூறி நாடகமாடுகிறார்கள். வருகிற 16-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகம் வருகிறார். கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்று பல்வேறு விஷயங்களை பேச உள்ளார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story