மாநில செய்திகள்

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை எதிரொலி: ராம மோகனராவ் பதவி நீக்கம்; புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் + "||" + Rama mokanarav dismissal; The appointment of the new chief secretary Girija Vaidyanathan

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை எதிரொலி: ராம மோகனராவ் பதவி நீக்கம்; புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை எதிரொலி:  ராம மோகனராவ் பதவி நீக்கம்; புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீக்கம் இதைத்தொடர்ந்து தலைமைச் செயலா

சென்னை,

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

நீக்கம்

இதைத்தொடர்ந்து தலைமை செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த 8.6.16 அன்று தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட ராம மோகனராவ் 22.12.16 அன்று அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு நேற்று இரவு வரை வேறு பதவி வழங்கப்படவில்லை.

கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

இந்தநிலையில் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள 22.12.16 தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நில நிர்வாகக் கமிஷனராக இருந்த கூடுதல் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராம மோகனராவ்க்கு பதிலாக தலைமைச் செயலாளர் பதவியில் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்படுகிறார்.

முழு கூடுதல் பொறுப்பு

மேலும் ராம மோகனராவ்க்கு பதிலாக, கண்காணிப்பு கமிஷனர் மற்றும் நிர்வாக சீர்திருத்த கமிஷனர் ஆகிய பதவிகளில் முழு கூடுதல் பொறுப்பு வகிக்கும்படி கிரிஜா வைத்தியநாதனுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கிறார்.

வெளிநாட்டில் பயிற்சி

புதிய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 1.7.1959 அன்று சென்னையில் பிறந்தார். அவரது வயது 57. ஐ.ஐ.டி.யில் படித்து இயற்பியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 1981–ம் ஆண்டில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் பெண்கள் பிரிவில் முதல் பெண்ணாகவும், அந்தத் தேர்வில் பங்கேற்ற ஒரு லட்சம் பேரில் 9–வது இடத்தையும் கிரிஜா வைத்தியநாதன் பிடித்தார்.

1993–ம் ஆண்டில் சி.எப்.ஏ. பட்டமும், 2011–ம் ஆண்டு ஐ.ஐ.டி.யில் சுகாதார பொருளாதார பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றார். 1983–ம் ஆண்டில் திருவள்ளூர் துணை கலெக்டராக பணியைத் தொடங்கினார்.

மதுரை மாவட்ட கலெக்டராக 1991–92–ம் ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார். 2010–ம் ஆண்டு அமெரிக்கா சென்று தலைமைத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் பயிற்சி பெற்றார். கிரிஜா வைத்தியநாதன் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2014–ம் ஆண்டு அவருக்கு கூடுதல் தலைமைச்செயலாளராக பதவி உயர்வு கிடைத்தது. 22.5.2013–லிருந்து நேற்று வரை அவர் நில நிர்வாக கமிஷனராக பணியாற்றினார்.

45–வது தலைமை செயலாளர்

சுகாதாரத்துறையில் அவருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் நீண்டகால அனுபவம் உண்டு. ஆவணக் காப்பக கமிஷனர், நிதித்துறை சிறப்புச் செயலாளர், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்தவர் கிரிஜா வைத்தியநாதன். மேலும், வனம், பள்ளிக்கல்வி, மாநில திட்டக் கமிஷன் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.

நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர், மின்வாரிய தலைவர் ஆகிய முக்கிய பதவிகளிலும் அவர் இருந்துள்ளார். தமிழகத்தின் 45–வது தலைமைச் செயலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர்

கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வெங்கட்ராமன். இவர் மத்திய அரசுப்பணியில் இருந்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் என்ற மிக உயர்ந்த பதவியை வகித்தவர் வெங்கட்ராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகரும், பா.ஜ.க. கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகரின் சகோதரரின் மனைவி கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பணியில் நேர்மையானவர் என்றும், எந்த அரசியல் கட்சிகளின் தூண்டுதலுக்கு ஆட்படாதவர் என்றும் பெயரெடுத்தவர் கிரிஜா வைத்தியநாதன்.

4–வது பெண் தலைமை செயலாளர்

தமிழகத்தில் 1940–ம் ஆண்டில் இருந்து இதுவரை தமிழகத்தின் தலைமை செயலாளர் பதவி வரை வந்த பெண்களில் இவர் 4–வதாக உள்ளார்.

தமிழகத்தின் முதல் பெண் தலைமை செயலாளர் லட்சுமி பிரானேஷ் (2.12.02 முதல் 30.4.05). பின்னர் மாலதி (1.9.10 முதல் 16.5.11), ஷீலா பாலகிருஷ்ணன் (31.12.12 முதல் 31.3.14) ஆகியோர் தலைமை செயலாளராக பணியாற்றிய பெண்களாகும்.

தமிழகத்தில் பிறந்து தமிழகத்தின் தலைமை செயலாளரான இரண்டாவது பெண் கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி பிரானேஷ் கர்நாடகத்தையும், ஷீலா பாலகிருஷ்ணன் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். தலைமை செயலாளர் பதவியில் 60 வயது வரை அதாவது இரண்டரை ஆண்டு காலம் பணியாற்ற கிரிஜா வைத்தியநாதனுக்கு வாய்ப்பு உள்ளது.