சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவி ஏற்பு


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 4 Jan 2017 11:15 PM GMT (Updated: 2017-01-05T03:10:05+05:30)

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

44-வது தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.எஸ்.தாக்குர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் 44-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான ஜெக்திஷ் சிங் கேஹர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நீதிபதி ஜே.எஸ்.கேஹருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கடவுளின் பெயரால் பதவியேற்று கொண்டார்.

டி.எஸ்.தாக்குர் பரிந்துரை

தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஆகஸ்டு 27-ந் தேதி வரை இந்த பதவியில் இருப்பார். இந்த பதவியை அலங்கரிக்கும் சீக்கிய சமூகத்தை சேர்ந்த முதல் நீதிபதி இவராவார்.

முன்னதாக, தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டி.எஸ்.தாக்குர், தனக்குப்பின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹரையே நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தீர்ப்புகள்

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளில் ஒருவராக இருந்து வரும் ஜே.எஸ்.கேஹர் பல்வேறு முக்கியமான தீர்ப்புகளை அளித்து நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்த நீதிபதிகள் நியமன சட்டத்தை ரத்து செய்தது, அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தது போன்ற முக்கியமான தீர்ப்புகளை வழங்கிய அரசியல் சாசன அமர்வுகளுக்கு இவரே தலைமை தாங்கி இருந்தார்.

நிதி மோசடி விவகாரத்தில் சிக்கிய சகாரா குழும தலைவர் சுப்ரதா ராயை சிறைக்கு அனுப்பியதிலும் ஜே.எஸ்.கேஹரின் பங்களிப்பு இருந்தது. இதைப்போல தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவிய ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற முக்கியமான தீர்ப்பை வழங்கி இருந்ததும் ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story