பெங்களூரு பாலியல் தொல்லை வீடியோ: 4 பேர் கைது, முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டான்


பெங்களூரு பாலியல் தொல்லை வீடியோ: 4 பேர் கைது, முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டான்
x
தினத்தந்தி 5 Jan 2017 6:37 AM GMT (Updated: 2017-01-05T12:07:52+05:30)

அனிதாவுக்கு 2 மர்மநபர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதை அந்த வழியாக சென்றவர்கள் சில அடி தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கும் காட்சிகளும் வெளியிடப்பட்டது.பெங்களூரு, 

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டு உள்ளான். 

பெங்களூரு பானசவாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கம்மனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அனிதா(வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி புத்தாண்டை கொண்டாட தனது தோழிகளுடன் வெளியே சென்றிருந்தார். புத்தாண்டை கொண்டாடிவிட்டு கடந்த 1–ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கம்மனஹள்ளிக்கு அனிதா ஆட்டோவில் வந்தார். ஆட்டோவில் இருந்து இறங்கி கம்மனஹள்ளி 5–வது மெயின் ரோட்டில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அனிதாவை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. 

பின்னர் 2 மர்மநபர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சென்று நடுரோட்டில் அனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை அங்கிருந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அந்த மர்மநபர்கள் தப்பிச் சென்று விட்டார்கள். இதுகுறித்து போலீசில் அனிதா புகார் எதுவும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், கம்மனஹள்ளி 5–வது மெயின் ரோட்டில் வசிக்கும் ஒருவரின் வீட்டின் முன்பக்க சுவரில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் அனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை கடத்திச் செல்ல முயன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. தனது வீட்டில் உள்ள கேமராவை நேற்று முன்தினம் உரிமையாளர் பார்த்தபோது, அனிதாவுக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுபற்றி உடனடியாக அவர் பானசவாடி போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து பானசவாடி போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கினார்கள்.

இந்த நிலையில், அனிதாவுக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ காட்சிகள் நேற்று கன்னட தொலைக்காட்சிகளில் வெளியானது.

மேலும் கடத்த முயன்றபோது மோட்டார் சைக்கிளில் அனிதா உட்கார மறுத்ததால், அவரை கீழே தள்ளிவிட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.

அத்துடன் அனிதாவுக்கு 2 மர்மநபர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதை அந்த வழியாக சென்றவர்கள் சில அடி தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கும் காட்சிகளும் வெளியிடப்பட்டது. ஆனால் அனிதாவை காப்பாற்றவோ, மர்மநபர்களை பிடிக்கவோ யாரும் முன்வரவில்லை.  மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நடமாடிய 12 பேரை பானசவாடி போலீசார் பிடித்து விசாரித்தனர். இப்போது இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து உள்ளனர். முக்கிய குற்றவாளி லினோ என அடையாளம் காணப்பட்டு உள்ளான் என செய்திகள் வெளியாகி உள்ளது.


Next Story