கர்நாடகாவுக்கு ரூ.1,782 கோடி வறட்சி நிவாரண நிதி மத்திய அரசு ஒப்புதல்


கர்நாடகாவுக்கு ரூ.1,782 கோடி வறட்சி நிவாரண நிதி மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:26 PM GMT (Updated: 5 Jan 2017 10:25 PM GMT)

கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது.

புதுடெல்லி,

கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. எனவே தங்கள் மாநிலத்துக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என மாநில அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டது. அதன்படி வறட்சி பாதித்த பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அந்த அறிக்கையை பரிசீலித்த மத்திய அரசு கர்நாடகாவுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்தது. இதற்காக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழு நேற்று கூடி விவாதித்தது. அப்போது தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,782.44 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைப்போல வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கும் ரூ.208.91 கோடி நிவாரணம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிதியும் தேசிய பேரிடர் நிவாரணம் மற்றும் தேசிய ஊரக குடிநீர் திட்ட நிதிகளில் இருந்து வழங்கப்படுகிறது.

இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பங்காரியா, உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி மற்றும் உள்துறை, நிதி, விவசாயத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story