‘5 மாநில தேர்தல் முடியும் வரை பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது’ தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை


‘5 மாநில தேர்தல் முடியும் வரை பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது’ தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2017 11:45 PM GMT (Updated: 2017-01-06T04:07:33+05:30)

5 மாநில சட்டசபை தேர்தல் முடியும் வரை பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என தலைமை தேர்தல் கமிஷனரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுடெல்லி,

5 மாநில சட்டசபை தேர்தல் முடியும் வரை பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என தலைமை தேர்தல் கமிஷனரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

5 மாநில தேர்தல்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந்தேதி தொடங்குகிறது. மறுநாள் அதாவது பிப்ரவரி 1-ந்தேதி, 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 4-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது.

நேரில் சந்தித்தனர்

இந்த தேர்தல்களை கருத்தில் கொண்டு மத்திய பா.ஜனதா அரசு பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே பா.ஜனதாவின் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அவை கோரிக்கை விடுத்து வந்தன.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை நேரில் சந்தித்து பேசினர்.

2012-ம் ஆண்டு சம்பவம்

அப்போது, 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தல்கள் முடியும் வரை, குறைந்தபட்சம் மார்ச் 8-ந்தேதி வரையாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என மத்திய அரசை கேட்டுக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது காங்கிரஸ் தலைவரும், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘கடந்த 2012-ம் ஆண்டு இதே 5 மாநில தேர்தலை காரணம் காட்டி மத்திய பட்ஜெட்டை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி, பிப்ரவரி 28-ந்தேதிக்கு பதிலாக மார்ச் 16-ந்தேதிதான் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்படியே தற்போதும் 5 மாநிலங்களின் தேர்தல் முடியும் வரை பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று கூறினார்.

தேர்தல் சட்டம்

தேர்தலில் அனுகூலம் ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையும் ஆளும்கட்சி மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் சட்டம் தெளிவாக உரைக்கிறது என்று கூறிய ஆசாத், இதில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மற்றொரு தலைவரான ஆனந்த் சர்மா கூறும்போது, ‘கடந்த காலங்களில் எந்த அரசும் வாக்காளர்களை கவர்வதற்காக தேர்தல்களுக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்தது இல்லை’ என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தை சந்தித்த எதிர்க்கட்சி பிரதிநிதிகள் குழுவில், டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), அம்பேத் ராஜன் (பகுஜன் சமாஜ்), நரேஷ் அகர்வால் (சமாஜ்வாடி அகிலேஷ் பிரிவு) திருச்சி சிவா (தி.மு.க.), கே.சி.தியாகி (ஐக்கிய ஜனதாதளம்) உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.

மத்திய அரசின் கருத்து கேட்பு

முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே அதாவது வருகிற 31-ந்தேதியே தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 அரசியல் கட்சிகள் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தன.

இதைப்போல பா.ஜனதாவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனாவும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டு இருப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பா.ஜனதா நிராகரிப்பு

எனினும் எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை பா.ஜனதா நிராகரித்து உள்ளது. இது குறித்து மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிபட தெரிவித்தார்.

இதைப்போல பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை நிதி மந்திரி அருண் ஜெட்லியும் நியாயப்படுத்தி உள்ளார். மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கை தேர்தலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என கூறி வரும் எதிர்க்கட்சிகள், பட்ஜெட் தாக்கல் குறித்து அச்சப்படுவதேன்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story