பெங்களூரு பாலியல் தொல்லை சம்பவம்; விராட் கோலி - அனுஷ்கா சர்மா கண்டனம்


பெங்களூரு பாலியல் தொல்லை சம்பவம்; விராட் கோலி - அனுஷ்கா சர்மா கண்டனம்
x
தினத்தந்தி 6 Jan 2017 7:55 AM GMT (Updated: 6 Jan 2017 7:55 AM GMT)

பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினராக நாம் இருந்திருந்தால் எவ்வளவு வேதனை அடைந்து இருப்போம். அவ்விடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள், நம்முடைய சிந்தனையில் மாற்றம் வேண்டும்.



புதுடெல்லி, 

பெங்களூரு பாலியல் தொல்லை சம்பவத்திற்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

பெங்களூருவில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பெண்களின் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளது. இதற்கிடையே பாலியல் தொல்லை சம்பவத்திற்கு பெண்களின் உடை மற்றும் இரவு நேரம் வெளியே செல்வது அரசியல் கட்சி தலைவர்களால் காரணம் காட்டப்பட்ட வேதனைக்குரிய சம்பவமும் நிகழ்ந்தது. பெங்களூரு சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, இந்தி நடிகை அனுஷ்கா சர்மா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

விராட் கோலி

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ள விராட் கோலி தேசம் அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும், சமமாக நடத்துவதாகவும் இருக்கவேண்டும். பெண்களை நாம் வித்தியாசமாக நடத்தக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றாக நின்று பெண்களை சிறுமைப்படுத்தும் இத்தகைய செயல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சிந்தனைகளை மாற்றுங்கள் உங்களைச் சுற்றியுள்ள உலகம் மாறும் என்று கூறிஉள்ளார். வீடியோவில் பேசும் விராட் கோலி, “இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் சிலர் இருக்கும் இந்த சமூகத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்து மிகவும் வேதனை அடைகின்றேன். 

இத்தகைய அத்துமீறிய தாக்குதல்களை சிலர் ஆதரிப்பது அதிர்ச்சியாக உள்ளது. நமது தேசத்தில் ஆணும் பெண்ணும் சரிசமமாக நடத்தப்படவேண்டும், பெண்கள் மீது மரியாதை, இரக்கம் கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினராக நாம் இருந்திருந்தால் எவ்வளவு வேதனை அடைந்து இருப்போம். அவ்விடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள், நம்முடைய சிந்தனையில் மாற்றம் வேண்டும், என்று கூறிஉள்ளார்.  

அனுஷ்கா சர்மா 

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் தொல்லை தாக்குதலுக்கு இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 
 
இது தொடர்பாக அனுஷ்கா சர்மா வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “மக்கள் கூட்டமாக நின்ற பகுதியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு உள்ளது. இருந்தவர்கள் சம்பவத்தினை பார்த்துக்கொண்டு நின்று உள்ளனர். உதவிசெய்ய யாரும் முன்வரவில்லை. அறிவற்றவர்கள் பெண்களின் உடை குறித்து கருத்து தெரிவிக்கிறார்கள், நள்ளிரவு என காரணம் கூறுகிறார்கள். சூழ்நிலையை புரியாமல் இதுபோன்ற அறிவற்றவர்களின் முதலில் கருத்துகேட்கப்படுகிறது(ஏன்?). சமுதாயத்தில் அவர்கள் பொறுப்பில் உள்ளதால் அவர்களுடைய சொந்த கருத்தும் சம்பவத்திற்கு தொடர்புடையதாகிவிடுகிறது. 

சம்பவத்தினை அங்கு நின்றவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தது ஏன்? என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு சமமாக அதனை பார்த்துக் கொண்டு இருந்தவர்களும் தவறிழைத்து உள்ளனர். கூட்டமாக நின்ற மக்கள் ஒன்று திரண்டு இதுபோன்ற சம்பவங்களை தடுத்து இருக்கலாம். எனவே இதில் அவர்கள் மட்டும் குற்றம் செய்யவில்லை, நாம் மற்றும் சமுதாயம் இதுபோன்ற நிகழ்வை தடுப்பதில் இரவில் தோல்வி அடைந்துவிட்டது. ஏனென்றால் நாம் இன்று சற்று பார்த்துக்கொண்டு நிற்போம் என்ற எண்ணம் கொண்ட சமூதாயத்தில் வாழ்ந்து வருகிறோம். உங்களுடைய மகன்களை உரிமையுள்ளவர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என உணரச்செய்வதற்கு பதிலாக பெண்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என கற்றுக் கொடுங்கள்.

 இந்த உலகம் அவர்களை எந்தவிதமாகவும் உணரச்செய்யும். இதுபோன்ற மிருகங்களாக மாறுவதில் இருந்து உங்களுடைய மகன்களை காப்பாற்றுங்கள். எங்களை துன்பத்தில் இருந்து விடுவியுங்கள் என்று கூறிஉள்ளார். 

Next Story