10 ஆயிரம் ஆண்டுகளில் மோசமான ஆட்சி: மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்


10 ஆயிரம் ஆண்டுகளில் மோசமான ஆட்சி: மத்திய அரசு  மீது சிவசேனா பாய்ச்சல்
x
தினத்தந்தி 6 Jan 2017 11:53 AM GMT (Updated: 2017-01-06T17:23:47+05:30)

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக மத்திய அரசை விமர்சித்துள்ள சிவசேனா, 10 ஆயிரம் ஆண்டுகளில் மோசமான ஆட்சி இது என்று தெரிவித்துள்ளது.

மும்பை,

மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா, கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் மோசமான ஆட்சி இது என்று கடுமையாக சாடியுள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா , மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சித்து இன்று தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ மராட்டிய மந்திரியை நாங்கள் ஒன்று கேட்க விரும்புகிறோம். நீங்கள் யார் பக்கம்  இருக்கிறீர்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கை பக்கமா? அல்லது ஆதரவற்ற பெண் பக்கமா? ஆதரவற்ற  இந்தப்பெண்ணின் பிரச்சினையை அரசு புரிந்துகொள்ளவில்லையென்றால், கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இதுபோன்ற கருணையற்ற எதையும் காதில் வாங்கி கொள்ள முடியாத அரசங்காத்தை பார்த்திருக்க முடியாது.

தலைநகர் டெல்லியில் அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆடைகளை களைந்து பெண் எதிர்ப்பு தெரிவிப்பது, அரசாங்கமே முன்னிறுத்தும் நிர்பயா சம்பவம் போல் ஆகிறது. இந்தப்பெண்ணின் செயலை தேசியவாதம் என்று வரையறுத்தால், உங்கள் மூளைக்கு சிகிச்சை அளிக்க தலீபானி மருத்துவர் தான் தேவை. இதுபோன்ற அட்டுழியங்கள் தலிபானி ஆட்சியில் மட்டுமே நடந்தேறும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று பாரதீய ஜனதா முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறது. உண்மை என்னவெனில் பண  மதிப்பு நீக்க நடவடிக்கையால் நடுத்தர மக்கள் ஏழை, வேலைவாய்ப்பு இல்லாத மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்”  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு தலைநகர் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு குழந்தையுடன் பெண் ஒருவர் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வந்தார். ஆனால், ரிசர்வ் வங்கி மாற்றிகொடுக்க மறுத்துவிட்டதால், ரிசர்வ் வங்கி வாயிலில் ஆடைகளை களைந்து போராடத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி சிவசேனா கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளது.

Next Story