புதிய சமரச முயற்சி தோல்வி சமாஜ்வாடியில் இழுபறி நீடிக்கிறது


புதிய சமரச முயற்சி தோல்வி சமாஜ்வாடியில் இழுபறி நீடிக்கிறது
x
தினத்தந்தி 7 Jan 2017 11:00 PM GMT (Updated: 7 Jan 2017 10:34 PM GMT)

சமாஜ்வாடியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

லக்னோ,

சமாஜ்வாடியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

சமாஜ்வாடியில் விரிசல்

உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாடியில் தந்தை முலாயம் சிங், அவருடைய மகனும் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்ட மோதல் அக்கட்சியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வாரம் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் யாதவ் தனக்குத்தான் கட்சியில் செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. நாங்கள்தான் உண்மையான சமாஜ்வாடி என்று கூறி வருகிறார்.

இரு தரப்பினருமே சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோருவதால் தேர்தல் கமி‌ஷன் இதுபற்றி முடிவை நாளை(திங்கட்கிழமை) எடுக்கும் என்று அறிவித்து இருக்கிறது.

தலைவர்கள் சந்திப்பு

இதனால் கட்சி பிளவுபடாமல் இருக்க இறுதி கட்ட சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அகிலேஷ் யாதவை அவருடைய சித்தப்பா சிவபால் சிங் சந்தித்து பேசி தானும், அமர்சிங் எம்.பி.யும் பதவி விலகுவதாக தெரிவித்தார். இந்த திட்டத்தை அகிலேஷ் யாதவ் இதுவரை ஏற்கவில்லை. இதனால் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் லக்னோவில் முலாயம் சிங்கை அவருடைய தம்பி சிவபால் சிங், மூத்த தலைவர்கள் ஆசம்கான், அம்பிகா சவுத்ரி, சட்டசபை சபாநாயகர் பிரசாத் பாண்டே மற்றும் பல தலைவர்கள் சந்தித்து பேசினர். இதில் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

எனினும், அம்பிகா சவுத்ரி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கட்சியில் எல்லாமே நன்றாக உள்ளது. சமாஜ்வாடி ஒரே கட்சியாகத்தான் இருக்கும்’’ என்றார்.

அகிலேஷ் பிடிவாதம்

எட்டாவா நகரில் முலாயம் சிங்கின் இன்னொரு சகோதரர் அபய்ராம் சிங் அகிலேஷ் யாதவை கடுமையாக சாடினார்.

அவர் கூறும்போது ‘‘கட்சியை ஒன்றுபடுத்த சிவபால் சிங் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்கிறேன். ஆனால், அகிலேஷ் யாதவ்தான் குழந்தைபோல் அடம்பிடிக்கிறார். கட்சியிலும், குடும்பத்திலும் குழப்பம் நிலவுவதற்கு அவரே காரணம்’’ என்றார். 

Next Story