ஏப்ரல் 1–ந் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு


ஏப்ரல் 1–ந் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2017 9:54 PM GMT (Updated: 8 Jan 2017 9:54 PM GMT)

ஏப்ரல் 1–ந் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. பண அபகரிப்பு கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் 100 நாள் வேலை திட்டம் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசால் செய

புதுடெல்லி,

ஏப்ரல் 1–ந் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பண அபகரிப்பு

கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் 100 நாள் வேலை திட்டம் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசே ஒதுக்கீடு செய்து வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கு ரூ.38,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைவிட ரூ.3,800 கோடி கூடுதல் ஆகும்.

அதே நேரம் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக வேலை பார்ப்போரின் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து பணத்தை அபகரிப்பது, திட்டத்துக்கு வழங்கப்படும் தினக் கூலியை சரிவர கொடுக்காமல் ஏமாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

ஆதார் அட்டை கட்டாயம்

இதையடுத்து 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

அதன்படி வருகிற ஏப்ரல் 1–ந் தேதி முதல் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ்வேலை பார்ப்பவர்களுக்கு கூலி கிடைக்கும். அதன்பிறகு ஆதார் இல்லாமல் வேலை வாய்ப்பு பெற முடியாது.

இதுபற்றி மத்திய அமைச்சரவை செயலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பதிவு செய்யவேண்டும்

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பெறுவதற்கு பதிவு செய்துள்ளவர்கள் 12 இலக்கம் கொண்ட ஆதார் அட்டை எண் அல்லது ஆதார் அட்டை பெறுவதற்கான நுழைவுச் சீட்டு நகலை மார்ச் 31–ந்தேதிக்குள் ஆதாரமாக பதிவு செய்யவேண்டும். இல்லையென்றால் அவர்கள் இத்திட்டத்தின் கீழ் பணப்பலனை பெற இயலாது.

அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் பணப் பயனைப் பெற குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய விவசாயியின் வங்கி கணக்கு புத்தகம், 100 வேலை திட்டத்தின் பணி அட்டை, தாசில்தார் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அளித்த சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் ஆதார் அட்டை பெறுகிற வரை வேலைக்கான கூலி வழங்கப்படும்.

மத்திய அரசு உத்தரவு

காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதார் அட்டை இல்லாத பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இத்திட்டத்தில் உள்ளோர் ஆதார் எண்ணை பெறுவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அந்த உத்தரவில் மத்திய அரசு கூறி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி மூலம் பணம்

இன்னொரு அதிகாரி கூறுகையில், “அரசு அளிக்கும் மானியத்தை முறைகேடாக பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காக ஆதார் கட்டாயம் ஆக்கப்படுகிறது. நேரடி மானியத் திட்டத்தில் வங்கிக் கணக்கு மூலம் பயனாளிகளுக்கு பணம் செலுத்துவதுபோல் 100 நாள் வேலை திட்டத்திலும் பயனாளிகள் முழுமையான பலனை பெறுவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்துவருகிறது. அதனால்தான் இத்திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டார்.


Next Story